கனடாவுக்கு புதிதாக குடிபெயர்ந்தவரா நீங்கள்?: உங்களுக்காக பயனுள்ள ஒரு தகவல்
புதிதாக கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், காப்பீடு செய்வது அவசர காலத்தில் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால், உங்கள் உடல் நலம், வீடு, வாகனம் மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும். அதற்கேற்றாற்போல நீங்கள் மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
வாகனக் காப்பீட்டுத் திட்டம்
கனடாவில் சாரதிகளாக பணியாற்றும் அனைவருக்கும் வாகனக் காப்பீடு கட்டாயம்.
வாகனக் காப்பீடு எடுக்கும்போது, குறைவான கட்டணம் செலுத்தும் காப்பீடு கிடைக்கிறதே என்று எண்ணி காப்பீட்டைத் திட்டமிட்டுவிடக்கூடாது.
அப்படி குறைவான கட்டணம் செலுத்தும் ஒரு காப்பீட்டை எடுத்து, துரதிர்ஷ்டவசமாக ஒருவேளை நீங்கள் ஒரு விபத்தை உண்டாக்கிவிட்டால், காப்பீட்டு நிறுவனம் வழங்கிய தொகை போக மீதமுள்ள தொகையை நீங்கள் உங்கள் கையிலிருந்து செலுத்த நேரிடும். ஆகவே, குறைவான கட்டணம் என்று மட்டும் பார்த்துவிடாமல், தீர ஆலோசித்து வாகனக் காப்பீடு எடுப்பது அவசியமாகும்.
வீட்டுக் காப்பீடு
நீங்கள் புதிதாக வீடு வாங்கினாலும் சரி, வீடு வாடகைக்குப் பிடித்தாலும் சரி, உங்கள் உடைமைகளை திருட்டு மற்றும் சேதம் முதலானவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக காப்பீடு செய்வது நல்லது.
ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு என்றாலே அதை சங்கடத்துடன் பார்க்கும் மன நிலை இன்னும் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், ஒரு வேளை துரதிர்ஷ்டவசமாக ஒருவர் இறந்துபோகும் பட்சத்தில், அவர் விட்டுச் சென்ற அவரது அன்பிற்குரிய குடும்பத்துக்கு அந்த காப்பீட்டுத் தொகை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, இறுதிச்சடங்குக்கான செலவுகள், ஒருவேளை காப்பீடு எடுத்தவர் ஒரு மாணவராக இருக்கும் பட்சத்தில், அவரது பெற்றோர் அந்த தொகையைப் பெற்று அவரது கல்விக்கடனை அடைக்க அந்த தொகை உதவலாம்.
பிள்ளைகளுக்கான கல்விச் செலவுக்கு உதவும் காப்பீடு
ஆயுள் காப்பீடு என்றாலே, அது இறந்த பிறகு கிடைக்கும் தொகை என்ற எண்ணமும் பலருக்கு உள்ளது. ஆனால், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவரது பிள்ளைகளின் கல்விக்காக, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு காப்பீட்டு முதிர்வுத்தொகையைப் பெற்று பயன்படுத்தும் சாத்தியமும் காப்பீட்டில் உள்ளது என்பதை கவனத்தில்கொண்டு, அதற்கேற்றாற்போல் காப்பீடு செய்வது நலம்.