உங்கள் பெற்றோர் கனேடிய குடிமக்களா? உங்களுக்கு ஒரு செய்தி
உங்கள் பெற்றோரில் ஒருவராவது கனேடிய குடிமகன் அல்லது குடிமகளா? அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது நீங்கள் பிறந்திருந்தால் கூட, கனேடிய குடியுரிமை பெறும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
கனேடிய குடிமகன் அல்லது குடிமகளுக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு குடியுரிமை வாய்ப்பு
நீங்கள் பிறக்கும்போது, உங்கள் பெற்றோரில் ஒருவர் கனேடிய குடிமகன் அல்லது குடிமகளாக இருந்திருந்தால், நீங்கள் வெளிநாட்டில் பிறந்திருந்தால் கூட, உங்களுக்கு கனேடிய குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதற்கு என்ன செய்யவேண்டும்?
அந்தவகையில் நீங்கள் ஒரு கனேடிய குடிமகனா என்பதை தீர்மானிப்பதற்காக, கனேடிய அரசு எதிர்பார்க்கும் ஒரு நடவடிக்கை, நீங்கள் கனேடிய குடிமகன் என்பதற்கான ஆதாரத்துக்கான விண்ணப்பத்தை (proof of Canadian citizenship application) சமர்ப்பிப்பதாகும்.
அதை, கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு (Canadian citizenship certificate) விண்ணப்பித்தல் என்றும் அழைக்கலாம்.
நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி, உங்கள் கனேடிய பெற்றோர் உயிருடன் இருந்தாலும் சரி, அல்லது மரணமடைந்திருந்தாலும் சரி, நீங்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்காக, நீங்கள் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்திலிருந்து விண்ணப்பிப்பதற்கான பேக்கேஜை பதிவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 75 டொலர்கள் ஆகும்.
உங்கள் பெற்றோரில் ஒருவர் கனேடிய குடிமகன் என்பதை நீங்கள் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கு நிரூபிக்கவேண்டும்.
அதற்கான ஆதாரங்களாக கீழ்க்கண்ட சான்றிதழ்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
- உங்கள் பெற்றோரின் பிறப்புச்சான்றிதழ்.
- உங்கள் பெற்றோரின் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்.
- உங்கள் பெற்றோரின் கனேடிய குடியுரிமை அட்டை.
விண்ணப்பம் மற்றும் அதற்கான கட்டணத்தை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பெற்றுக்கொண்டதும், அதை அந்த அமைப்பு மீளாய்வு செய்து, அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், அதை ஏற்றுக்கொண்டதற்கான ரசீதை (acknowledgement of receipt) உங்களுக்கு வழங்கும்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்களுக்கு கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.
கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்தை வைத்து, நீங்கள் கனேடிய பாஸ்போர்ட் பெறலாம், தேர்தலில் வாக்களிக்கலாம், ஒரு கனேடிய குடிமகனாக அல்லது குடிமகளாக கிடைக்கும் பல சலுகைகளைப் பெறலாம்.