பிரித்தானிய நகரமொன்றிலிருந்து 10,000 பேரை வெளியேற்றிய ராணுவம்: திகிலுடன் காத்திருந்த மக்கள்...
மகளுக்காக வீட்டுத்தோட்டத்தில் பள்ளம் தோண்டிய ஒரு தந்தை, தன் மண்வெட்டி ஏதோ ஒரு உலோகப்பொருள் மீது மோதியதைத் தொடர்ந்து பொலிசாரை அழைத்தார் என சின்னதாக தொடங்கிய ஒரு செய்தி, இன்று, 10,000 பேரை வெளியேற்றிய ராணுவம், திகிலுடன் காத்திருந்த மக்கள் என்ற தலைப்புச் செய்தியாகியுள்ளது.
மகளுக்காக வீட்டுத் தோட்டத்தில் பள்ளம் தோண்டிய நபர்
செவ்வாயன்று, இங்கிலாந்தின் Plymouth நகரத்திலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர், தன் வீட்டை சற்று பெரிதாக்க விரும்பியதால், அவரது தந்தையான Ian Jury (57) மகளுக்கு உதவியாக தோட்டத்தில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரது மண்வெட்டி ஏதோ உலோகப் பொருள் ஒன்றில் மோதவே, பள்ளம் தோண்டுவதை நிறுத்தியுள்ளார் அவர். தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, பள்ளத்திலிருந்த மண் மழையால் அடித்துச் செல்லப்பட, பள்ளத்துக்குள்ளிருந்தது ஒரு வெடிகுண்டு என்பது புரியவே, உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளது அந்தக் குடும்பம்.
10,000 பேரை வெளியேற்றிய ராணுவம்
Ian Jury, அந்த வெடிகுண்டை புகைப்படம் எடுத்து பொலிசாருக்கு அனுப்ப, நகரமே பரபரப்பானது. வெடிகுண்டு நிபுணர்கள், ராணுவ வீரர்கள், அவசர மருத்துவ உதவிக்குழுவினர், பொலிசார் என ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
முதலில் அந்த வீட்டுக்கருகே வாழ்ந்த 1,200 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். வியாழக்கிழமை 3,250 பேர் வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் மொத்தத்தில், 10,320 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.
நேற்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நேற்று, மாலையில் மக்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்கவைக்க இருப்பது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஆகும். மேலும், அது 500 கிலோ எடை கொண்டது. அந்த வெடிகுண்டை அந்த வீட்டிலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, ராணுவ வாகனம் ஒன்றில் ஏற்றி, கடலுக்குக் கொண்டு சென்று வெடிக்கவைத்துள்ளார்கள் ராணுவத்தினர்.
திகிலுடன் காத்திருந்த மக்கள் மனதில், போர்க்காலங்கள் குறித்த எண்ணங்கள் வந்து சென்றிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |