இந்திய வீரர்களிடம் திமிரும், அகங்காரமும்! கபில் தேவின் விமர்சனமும், ஜடேஜாவின் பதிலும்
சமீபத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோற்றதையொட்டி அணியின் வீரர்கள் தேர்வு குறித்தும், தோல்வி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் போன்றோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர் விளையாட சுற்றுப்பயணம் செய்தது.
இதில் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் போட்டியில் முதல் போட்டியில் வென்று இரண்டாவது போட்டியில் தோற்றது.
மேற்கு இந்திய தீவுகள் தொடர்ந்து மோசமாக விளையாடியதன் மூலம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியை தொடர்ந்து இந்திய முன்னாள் வீரர் கபில் தேவ், ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணி வீர்கள் அதிகம் சம்பாதிப்பதால், அவர்களுக்கு திமிரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அகங்காரமும் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடருக்கு தரும் முக்கியத்துவத்தை இந்திய அணிக்கு கொடுப்பதில்லை. அவர்கள் அப்படி இருக்க கூடாது.
இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாடிய சுனில் கவாஸ்கர் போன்ற வீரரிடம் உதவியோ, கருத்தோ யாரும் கேட்பதில்லை என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்டபோது, கபில் தேவ் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை.
அவரது கருத்தை அவர் சொல்ல அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. நாங்கள் களத்தில் எங்கள் நூறு சதவீத திறனை வெளிப்படுத்துகிறோம்.
நாங்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறோம், கடுமையாக உழைக்கிறோம், மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறோம்.
கபில் கூறுவதைப் போல இந்திய வீரர்கள் யாரிடமும் திமிரும் அகங்காரமும் இல்லை.
நாங்கள் தோற்கும்போது இது போன்ற கருத்துக்கள் வரலாம், ஆனால் நாங்கள் சிறந்த அணியாக, சிறந்த வீரர்களுடன் செயல்படுகிறோம். இந்தியாவுக்காக விளையாடுவதே எங்கள் குறிக்கோள் என பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |