கணவனால் ஆணவக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப்பெண்: பிரித்தானியாவில் நினைவிடம்
பிரித்தானியாவில், மலையுச்சியிலிருந்து கணவனால் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணொருவருக்கு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது.
ஆனால், மலையுச்சியிலிருந்து விழுந்த ஃபவ்ஸியா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, அவரை மீட்க வந்த பொலிசார் ஒருவரிடம், ’என் கணவரை என் அருகே வரவிடாதீர்கள், அவர்தான் என்னை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
அன்வருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையிலிருந்து விடுவிக்கப்படமுடியாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நினைவிடம் திறப்பு
ஃபவ்ஸியா கொல்லப்பட்ட இதே நாளில், அவர் கொல்லப்பட்ட இடத்தில், அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் இன்று திறந்துவைக்கப்பட உள்ளது.
ஃபவ்ஸியாவின் தாயாகிய யாஸ்மின் ஜாவேதும், ஆணவக்கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனமான Karma Nirvana என்னும் அமைப்பும், இன்று அந்த நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள்.
தங்கள் கணவர்களால் கொல்லப்பட்ட அனைத்து பெண்களுக்குமான அஞ்சலிதான் இந்த நினைவிடம் என்று கூறியுள்ளார் யாஸ்மின்.
அத்துடன், தன் பிள்ளை கொடூரமாகக் கொல்லப்பட்ட இடத்துக்குச் செல்ல யார் விரும்புவார்கள்? என்றாலும், இன்று நான் அந்த இடத்தில் இருப்பது மிக முக்கியம் என்கிறார்.
அங்கு செல்வது தனக்கு மிகவும் கடினமான ஒன்றாகும் என்று கூறும் யாஸ்மின், அந்த நினைவிடம், ஃபவ்ஸியாவைப்போல தங்கள் இன்னுயிரை இழந்த அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அவர்கள் மறக்கப்படவில்லை என்றும், அது நம்பிக்கையின் அடையாளம் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |