பணம் வேண்டாம்! இதை மட்டும் திருப்பி கொடுங்க.. பிரித்தானிய தம்பதியின் உருக்கமான வேண்டுகோள்
இங்கிலாந்தில் ஒரு தம்பதி திருடர்களிடம் வைத்த உருக்கமான வேண்டுகோள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்து நாட்டின் Birmingham நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்நிலையில் வெளி ஊருக்கு சென்று இருந்த வீட்டின் உரிமையாளர்கள், திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் திருடுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்பதை சோதனை செய்துள்ளனர். அப்போது 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தங்கள் குழந்தையின் சாம்பல் கலசமும் கொள்ளைப் போனது தெரியவந்தது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான தம்பதியினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், எங்கள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை கூட திருப்பி கொடுக்க வேண்டாம்.
ஆனால் தயவுசெய்து எங்கள் குழந்தையின் அஸ்தியை மட்டும் மீட்டுக் கொடுங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தை உடல் சரியில்லாத காரணத்தால் பிறந்து சில மணிநேரங்களிலேயே இறந்துவிட்டது.
இந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத தம்பதியினர், அந்த குழந்தையின் நினைவாக சாம்பலை 10 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளனர். இப்படி உள்ள சூழலில் அந்த அஸ்தி திருடு போயிருப்பது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ட்விட்டர் பக்கத்தில், யாராவது அந்த கலசத்தை கண்டால் அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.