ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : வெற்றிக் கோப்பையை கைப்பற்றிய ஆஷ்லே பார்டி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் டேனிலே கோலின்ஸூம் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-3,7-6 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 44 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அதேசமயம் ஆஷ்லே பார்டி வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷ்லே 2019 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் தொடரிலும், கடந்தாண்டு விம்பிள்டன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மேலும் இந்த தொடரில் அவர் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.