அஸ்வினை முதல் விக்கெட்டுக்கு களமிறங்கியது ஏன்? ராஜஸ்தான் அணியின் திட்டம் இதுதான்
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினை முதல் விக்கெட்டுக்கு களமிறக்கிய ராஜஸ்தான் அணியின் திட்டம் வெற்றி கண்டது.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது முதல் விக்கெட் வீழ்ந்ததும் யாரும் எதிர்பாராத விதமாக அஸ்வின் களம் இறங்கினார்.
சாம்சன், மிட்செல், ஹெட்மையர் ஆகியோர் இருக்கும் போது அஸ்வின் ஏன் களமிறக்கப்பட்டார் என்று ரசிகர்கள் யோசிப்பதற்குள் அவர் பவுண்டரிகளை விளாசி மிரள வைத்தார். 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
தற்போது முதல் விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸின் திட்டம் என்னவென்றால், புனே களத்தில் 2வதாக பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். எனவே பெரிய இலக்கை முதலில் பேட்டிங் செய்யும் அணி நிர்ணயிக்க வேண்டியது அவசியம். அதற்கு பவர்பிளே-யில் முடிந்த அளவுக்கு ஓட்டங்களை குவிக்க வேண்டும்.
எனவே தான் அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கி விளாச கூறியுள்ளனர். பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தது சாம்சனை, ஆனால் அஸ்வின் முதல் விக்கெட்டுக்கு இறங்கி அதிரடியில் மிரட்டி ராஜஸ்தானின் திட்டத்தை ஓரளவு நிறைவேற்றினார். அவரது அதிரடி ஆட்டத்தினால் 4வது ஓவரில் 33 ஓட்டங்கள் வரை அந்த அணி எட்டியது.