எங்க டீமை விட்டு என்னை தூக்கிட்டாங்களா? இது யார் பண்ண வேலைன்னு தெரியல..அதிர்ச்சியடைந்த அஸ்வின்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தன்னை விடுவித்ததாக தவறான செய்தியை பரப்பினார்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பொல்லார்ட் கொடுத்த அதிர்ச்சி
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒவ்வொரு அணியும் தற்போது சில வீரர்களை அணியில் இருந்து விடுவித்து வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி கீரென் பொல்லார்ட்டை விடுத்ததாக அறிவித்த பின்னர் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது மும்பை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
மற்றொரு மேற்கிந்திய தீவுகள் வீரரான ஜேசன் ஹோல்டரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் விடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை விடுவித்ததாக செய்தி பரவியது.
அஸ்வினின் விளக்கம்
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் தன்னை விடுவிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ' இந்த ஆண்டு என்னை விடுவிக்கலாம் என எங்கள் அணி (ராஜஸ்தான் ராயல்ஸ்) நினைத்தார்கள். எவ்வளவோ பேர் இன்று காலை என்னை அணி விடுவித்துவிட்டதாக கூறினார்கள். சிலர் எனக்கு போன் செய்து Release செய்ததற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றெல்லாம் கூறினார்கள்.
அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சென்ற ஆண்டு நன்றாக தானே விளையாடினேன் என யோசித்தேன். பின் சரி என நான் அமர்ந்திருக்கும்போது, RR-யிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. உங்களை எங்கள் அணியில் தக்கவைத்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் தான் தெரிந்தது இது யார் பண்ண வேலை என்று தெரியவில்லை. எனினும் பரவாயில்லை, பார்க்க நன்றாக இருந்தது. எனினும் நமக்கு உண்மை தெரியும், அணியில் தான் இருக்கிறோம். என்னை விடுவிக்கவில்லை என்று தெரியும்.
என் அம்மா கூட வந்து என்னிடம் கேட்டார்.
இதுபோன்ற புரளிகளை கிளப்பி விடும்போது பார்க்க நன்றாக தான் இருக்கிறது. வெளியில் இருந்து என்னை நானே செய்தியாக பார்த்துக் கொண்டேன். எங்கள் அணி மேலும் வலுசேர்க்க தான் நினைக்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
@BCCI
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அஸ்வின் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.