போராடும் அவர் ரொம்ப பாவம்! இந்திய வீரருக்காக வருந்திய அஸ்வின்
இந்திய வீரர் இஷான் கிஷன் ரொம்ப பாவம் என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
போராடும் இஷான் கிஷன்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கொண்ட தொடர்களில் இரு அணிகளும் மோதுகின்றன.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
டி20 அணியில் இடது கை வீரர் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். அவருக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடக்க வீரர்களாக இந்திய அணியில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி நிலவுகிறது.
ஒருபுறம் சுப்மன் கில் களமிறங்குவது உறுதி என்றாலும், மற்றொரு வீரராக கிஷான் அல்லது ரிஷாப் பண்ட் இருவரில் யார் களமிறங்குவார்கள் என நீங்கள் விரும்புறீர்கள் என அஸ்வின் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தொடக்க வரிசையில் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இஷான் கிஷன் குறித்து அஸ்வின் கூறுகையில், 'இஷான் கிஷன் ரொம்ப பாவம். ரொம்ப நாளாக அணியுடன் பயணிக்கிறார். ஒரு வீரராக அவருக்கு நீட்டிக்கப்பட்ட ஓட்டங்கள் கிடைக்கவில்லை. அவரும் அதனை எதிர்பார்ப்பார். எனவே, தொடக்க வீரர்களாக கில் - பண்ட் அல்லது கில் - கிஷன் யார் களமிறங்குவார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
@BCCI/IPL
இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி ஓட்டங்களை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.