இந்திய அணியில் இருந்து அவரை எப்படி தள்ளி வைக்க முடியும்? கங்குலி கொடுத்த தெளிவான விளக்கம்
இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினை எப்படி ஒதுக்க முடியும் என்று பிசிசிஐ தலைவரான கங்குலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பின்பு, இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில், அஸ்வின் சேர்க்கப்பட்டது, டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது.
தற்போது இந்திய அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித்தை நியமித்தது என்று பல அதிரடி விஷயங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அஸ்வின் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை கங்குலி Backstage with Boria நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதில், அஷ்வின் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு அற்புதமான வீரர். அவரை இந்திய அணியில் இருந்து தள்ளி வைப்பது மிகவும் கடினம். கடந்த 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டு இந்திய அணி ஐ.சி.சி தொடரை வென்ற போது அந்த அணியின் சிறப்பான பந்து வீச்சாளராக அஷ்வின் இருந்தார்.
அதுமட்டுமின்றி, குறிப்பாக ஐபிஎல் தொடரில், சென்னை அணி எப்போதெல்லாம் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறதோ அப்போதெல்லாம் தனது சிறப்பான பந்துவீச்சை அஷ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
பவர்பிளே ஓவர்களிலும் சரி, முக்கியமான சூழ்நிலையிலும் சரி அவர் விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவர் எப்படிப்பட்ட வீர ர் என்பதை அவருடைய சாதனைகள் எடுத்து காட்டும், எனவே அஸ்வினை அணியில் இருந்து தள்ளி வைக்க முடியாது என்று பேசியுள்ளார்.