ரவிசாஸ்திரி அப்படி சொன்னவுடனே... ரெம்ப கஷ்டமாகியிருச்சு! அஸ்வின் வேதனை
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், 2018-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது, ரவிசாஸ்திரி சொன்ன வார்த்தை குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஆரம்ப காலத்தில், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் கலக்கி வந்தார். அதன் பின் காலங்கள் செல்ல, செல்ல அஸ்வின் ஒரு டெஸ்ட் அணி வீரராக மட்டுமே அணியில் எடுக்கப்பட்டார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் ஒதுக்கப்பட்டே இருந்தார். இருப்பினும், ஐபிஎல் தொடர்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதன் பயனாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில், நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து அஸ்வின் இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று கங்குலி வெளிப்படையாகவே கூறிவிட்டார். இதனால் அஸ்வினை இனி மூன்று வித போட்டிகளிலும் பார்க்க முடியும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்நிலையில், அஸ்வின் கடந்த 2018-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, நடந்த சம்பவம் குறித்து சற்று வேதனையுடன் இப்போது பேசியுள்ளார். அதில், அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
அப்போது அவர் சிட்னி டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி, அயல்நாட்டு மைதானங்களில் இந்தியாவின் முதன்மையான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் என் மனம் நொறுங்கியது, மிகவும் மனம் நொந்து போனேன்.
ஏனெனில் ஒரு வீரராக குல்தீப் யாதவின் சாதனையை பாராட்டுக்குரியது தான். அவர், அவுஸ்திரேலியா மண்ணில் 5 விக்கெட்டுகளை எடுத்தது சிறப்பான ஒன்று. நான் கூட அந்த சாதனையை நிகழ்த்தியது கிடையாது.
இப்படி சிறப்பாக குல்தீப் யாதவ் செயல்பட்டு இருந்தாலும் என்னை அணியில் இருந்து வெளியே தூக்கி எறிந்தது போல் உணர்ந்தேன். அதுமட்டுமின்றி அவர் கூறிய அந்த வார்த்தைகளால் நான் அன்று நெருங்கிவிட்டேன்.
அதன் பின், வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் என் மனைவியுடன் சென்று பேசிக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகே என்னை நான் சரி செய்து கொண்டு அறையிலிருந்து வெளி வந்து அணி வீரர்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினார்.