ஆண்கள் அணி அதைச் செய்ததில்லை: மகளிர் அணியை பாராட்டும் அஷ்வின்
மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி.

ஒரு காலத்தில், பெண்கள் அணிதானே என சிலரால் புறக்கணிக்கப்பட்ட அணிக்கு, இன்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
மகளிர் அணியை பாராட்டும் அஷ்வின்

இந்நிலையில், இந்திய அணியின் தலைவரான ஹர்மன்பிரீத் கௌர் செய்த ஒரு விடயத்தை மனதார பாராட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஷ்வின்.
ஆம், போட்டியில் வென்ற இந்திய அணி பெற்ற கோப்பையை இந்திய அணியின் முன்னாள் தலைவர்களான மித்தாலி ராஜ், அஞ்சும் சோப்ரா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான ஜுலான் கோஸ்வாமி ஆகியோர் கையில் கொடுத்தார் ஹர்மன்பிரீத்.

அந்தக் கோப்பையைக் கையில் வாங்கிய அவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப்போனதை பலரும் கவனித்திருக்கலாம்.
இந்நிலையில், ஹர்மன்பிரீத் கோப்பையை அணியின் முன்னாள் தலைவர்களிடம் கொடுத்த விடயத்தை மனதார பாராட்டியுள்ளார் அஷ்வின்.
ஆண்கள் அணியும் தங்கள் முன்னாள் வீரர்களைப் புகழ்ந்து பேசுவதுண்டு. ஆனால், அவர்கள் இப்படிச் செய்ததில்லை என்கிறார் அஷ்வின்.
இந்திய அணியின் இந்த செயலுக்காக அவர்களுக்கு ஒரு சல்யூட் என்று கூறும் அஷ்வின், அவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும், இப்போதுள்ள இந்திய மகளிர் அணி, தங்கள் வெற்றிக்கு வித்திட்ட முன்னோடிகளான முந்தைய அணியினரின் முயற்சியை மதிக்கிறார்கள்.
இன்றைய வெற்றி, இன்றைய வெற்றி அல்ல, அது 25 ஆண்டு கால உழைப்பின் வெற்றி, என்று கூறும் அஷ்வின், முந்தைய தலைமுறையையும் மகிழ்வித்து மகிழும் இன்றைய இந்திய அணியின் செயலைப்போல இதுவரை பார்த்ததில்லை என்கிறார்!
அதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்க அணியும் கடுமையாக போராடியதையும் மறுக்கமுடியாது. அவர்கள் அடைந்த ஏமாற்றத்தை குறிப்பாக, சதமடித்தும் பயனில்லாமல் போனதால் அணித்தலைவர் லாரா வடித்த கண்ணீரை பலரும் தொலைக்காட்சியில் கவனித்திருக்கக்கூடும்.
இந்நிலையில், வெற்றி பெற்ற அணியின் தலைவரான ஹர்மன்பிரீத், கோப்பையை இழந்த தென்னாப்பிரிக்க அணியின் தலைவரான லாராவை (Laura Wolvaardt) அழைத்து, கோப்பையை ஒருபக்கம் தானும் மறுபக்கம் லாராவும் பிடித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அவர் கோப்பையை லாராவுடன் பகிர்ந்துகொண்டதையும் ஏராளமானோர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |