டோனி சொல்லும் இந்த வார்த்தை தான் என்னை மாற்றியது! அஸ்வின் நெகிழ்ச்சி
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், டோனி சொன்ன அந்த வார்த்தை தான் தன்னை காப்பாற்றியதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஆரம்ப காலத்தில், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் நீக்க முடியாத வீரராக இருந்து வந்தார்.
அதன் பின் காலங்கள் செல்ல, செல்ல அஸ்வின் ஒரு டெஸ்ட் அணி வீரராக மட்டுமே அணியில் எடுக்கப்பட்டார். இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் சர்வதேச அளவில் டி20 போட்டிகளே விளையாடத அஸ்வின் எப்படி அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இதன் பின் இந்தியா விளையாடிய தொடர்களில் அஸ்வின் நீக்க முடியாத வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ தலைவரான கங்குலி சமீபத்திய பேட்டியில் கூட, அஸ்வினை எப்படி அணியில் இருந்து நீக்க முடியும், அவருடைய சாதனைகளை எடுத்து பாருங்கள், அதுவே பதில் சொல்லும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்வின், சமூகவலைத்தளம் மூலம் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது டோனியுடன் இருக்கும் நட்பு பற்றி பேசியுள்ளார்.
அதில், நான் எப்போதுமே சுய நம்பிக்கை கொண்ட ஒரு நபர், இருப்பினும் அவ்வப்போது ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் கொஞ்சம் கலங்கிவிடுவேன், அப்போது எல்லாம் உடனே டோனியிடம் சென்று சில அறிவுரைகளை கேட்பேன்.
நான் அப்படி ஒரு சூழ்நிலையில் செல்லும் போதெல்லாம் அவர் என்னிடம் ஒன்றே ஒன்று மட்டும் தான் கூறுவார். காயம் காரணமாக நீ விளையாடாமல் போனாலும் உன்னை நீ தயார் செய்து கொண்டே இரு அது மட்டும் தான் உன்னுடைய வேலை. போட்டியின் முடிவை கண்டு எப்போதும் பயப்படக் கூடாது, முயற்சி செய்து பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.
ஏனெனில் தோல்வியை கண்டு ஒதுங்கி இருப்பதை விட களத்தில் நின்று தோற்றாலும் பரவாயில்லை என்று கூறுவார்.
இந்த வார்த்தை தான் நான் எப்போது கலங்கி நின்றாலும், எனக்கு உத்வேகத்தை கொடுக்கும், அது தான் என்னுடைய வெற்றிக்கும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.