சென்னை அணியில் அஸ்வின் இணைந்து விளையாடுவதில் இருக்கும் சிக்கல் இதுதான்...!
ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணியில் விளையாட தடையாக இருப்பது குறித்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடக்கவுள்ள நிலையில், புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் சூதாட்ட புகாரில் 2 ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்படும் வரை விளையாடினார். பின் அடுத்த 2 ஆண்டுகள் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக களமிறங்கினார்.
தொடர்ந்து மீண்டும் சென்னை அணியின் தடை நீங்கிய பிறகு அஸ்வின் பஞ்சாப் அணியால் ரூ.7.6 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அதன்பின் 2 ஆண்டுகள் பஞ்சாப் அணியின் கேப்டனாக பயணித்த அஸ்வினை 2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணி டிரேடிங் மூலம் தனது அணியில் இணைத்துக் கொண்டது.
பின் டெல்லி கேப்பிடல் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அஸ்வின் மிக சிறப்பாக செயல்பட்டு பல முறை டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு தனது முழு பங்களிப்பையும் கொடுத்தார்.
இவரை நடப்பாண்டுக்கான தொடரில் டெல்லி அணி தக்க வைக்கும் என எதிர்பார்த்த நிலையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நான் எங்கிருந்து எனது ஐபிஎல் பயணத்தை (சென்னை அணி) ஆரம்பித்தேனோ மீண்டும் அந்த அணியில் விளையாடுவதற்கு ஆசையாக உள்ளது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமான திட்டங்களை வைத்துள்ளதால் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு போகிறேன் என தெரியவில்லை எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
மேலும் ஏற்கனவே சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி இருப்பதன் காரணமாக சென்னை அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.