மழை ஆடிய ஆட்டம்... ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி
ஆசியக் கிண்ணம் தொடரில் நடைபெற்று வந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு
ஆசியக் கிண்ணம் தொடரின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
Credit: Bcci
இந்த நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 11, விராட் கோஹ்லி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14 , சுப்மன் கில் 10 என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இந்த நெருக்கடியால் இந்திய அணி 66 ஓட்டங்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது.
சிறப்பாக ஆடிய இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 81 பந்துகளில் 82 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ஓட்டங்களும் விளாசினர். இறுதியாக இந்திய அணி 48.5 ஓவர்களுக்கு 266 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Credit: Bcci
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியின் துடுப்பாட்டம் முடிவடைந்த போதே மழை பெய்ய தொடங்கியது. இதனால் மைதானம் முழுக்க விரிப்புகள் விரிக்கப்பட்டு கவர் செய்யப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், இரவு 9 மணிக்கு நடுவர்கள் பரிசோதனை செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
பாதியிலேயே கைவிடப்பபட்டது
9 மணிக்கு ஆட்டம் தொடங்கினால், டிஎல்எஸ் விதிகளின் படி இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 40 ஓவர்கள் 239 ஓட்டங்களும், 30 ஓவர்களில் 203 ஓட்டங்களும், 20 ஓவர்கள் என்றால் 155 ஓட்டங்களும் இலக்காக கூறப்பட்டன.
ஆனால் மழை மட்டும் நின்றபாடில்லை. இதனால் 9.50 மணி வரை பொறுத்திருந்த நடுவர்கள், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
Credit: Bcci
இதன் மூலம், பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் பரபரப்பு நிறைந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியிலேயே கைவிடப்பபட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |