ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி
சூப்பர் 4 சுற்றில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன் இலங்கை
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய திமுத் கருணாரத்னே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி 40 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் சமாரவிக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர்.
குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களும் சமாரவிக்ரமா 93 ஓட்டங்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ஓட்டங்கள் எடுத்தது.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
வங்காளதேச அணி சார்பில் தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 258 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி துடுப்பாட்டம் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது நைம் 21 ஓட்டங்களும், மெஹதி ஹசன் 28 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து லிட்டன் தாஸ் (15), கேப்டன் ஷகிப் (3), முஷ்பிகுர் ரகிம் (29) ஆகியோர் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.
இதனால், சரிவில் இருந்த அணியை மீட்க டோஹிட் ஹிரிடோய் போராடினார். அவர் தன் பங்குக்கு 97 பந்துகளில் 82 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களே எடுத்தது.
இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீக்ஷனா, தசுன் ஷனகா மற்றும் பதிரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |