கனடாவில் ஆசிய நாட்டவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை... இலங்கையரான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ள தகவல்
கனடாவில் நேற்று மதியம் பொலிசார் ஒருவர் ஒரு நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதே நபர் பின்னர் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரையும் சுட்டுக்கொன்றார்.
கனடாவில் ஒருவர் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒரு ஆசிய நாட்டவர் மற்றும் ஒரு பொலிசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.
கனடாவின் Mississaugaவில் நேற்று மதியம் பொலிசார் ஒருவர் திடீரென ஒரு நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் கான்ஸ்டபிள் Andrew Hong (48) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Andrewவின் மீதான தாக்குதல் திடீரென மறைந்திருந்து தாக்கப்பட்ட தாக்குதல் என்று கூறிய பீல் பொலிஸ் அதிகாரியான இலங்கையரான நிஷான் துரையப்பா, உயிரிழந்த தங்கள் சக பொலிசாருக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டார்.
இந்த துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்திற்குள் மில்ட்டன் நகரில் அதே நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அந்த தாக்குதலில் பாகிஸ்தானியரான ஷகீல் அஷ்ரஃப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார், இருவர் காயமடைந்துள்ளார்கள்.
தாக்குதல்தாரி குறித்து பொலிசார் மக்களை எச்சரித்த நிலையில், 4.00 மணியளவில் ஹாமில்ட்டன் நகரிலுள்ள கல்லறை ஒன்றில் தாக்குதல்தாரி பதுங்கியிருப்பது தெரியவரவே, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
ஆனால், அந்த நபர் பொலிசார் மீது மீண்டும் தாக்குதல் நடத்த, பொலிசாருக்கும் அவருக்கும் நடந்த சண்டையில் அந்த நபர் கொல்லப்பட்டார்.
அவரது பெயர் Shawn Petry (30) என தெரியவந்துள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை.
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.