ஐரோப்பாவுக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா ஒப்புதல்!
மார்ச் மாத இறுதிக்குள் கூறப்பட்டதை விட கூடுதலாக 9 மில்லியன் டோஸ்களை அனுப்புவதாக அஸ்ட்ராஜெனேகா ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் மார்ச் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென பிரித்தானிய நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிடம் ஐரோப்பா ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால், பிரித்தானியாவில் உள்நாட்டு தேவை அதிகமாக இருப்பதாகவும், தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்ப்பட்டதாகவும் கரணம் கூறிய அஸ்ட்ராஜெனெகா, மார்ச் மாத இறுதிக்குள் 31 மில்லியன் டோஸ்களை மட்டுமே அனுப்ப முடியும் என கைவிரித்தது.
ஏற்கெனவே, தடுப்பூசி திட்டத்தில் பிரித்தானியா மற்றும் அமேரிக்கா ஆகிய நாடுகளை விட பின்தங்கிய நிலையில் இருக்கும் ஐரோப்பா அஸ்ட்ராஜெனெகாவின் இந்த பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதன்காரணமாக கடந்த சில நாட்களாக அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula Von der Leyenக்கு அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 7 தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர், அஸ்ட்ராஜெனேகா மார்ச் இறுதியில் கூடுதலாக 9 மில்லியன் டோஸ்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக Ursula Von der Leyen தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 40 மில்லியன் என்பது முன்னதாக அஸ்ட்ராஜெனெகா வழங்குவதாக ஒப்புக்கொண்ட அளவில் பாதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.