இரத்தக்கட்டிகளைத் தொடர்ந்து ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மற்றொரு பிரச்சினை: ஒருவர் பலி இருவர் மருத்துவமனையில்...
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் சிலருக்கு இரத்தக்கட்டி மற்றும் இரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்படும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தடுப்பூசியால் இப்போது மற்றொரு பிரச்சினை ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், தங்கள் 30 வயதுகளில் உள்ள பெண்கள் இருவர், மற்றும் 40 வயதுகளிலுள்ள ஆண் ஒருவர் ஆகியோர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்கள் ischaemic stroke என்னும் ஒருவகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களது இதயத்திலிருந்து உடல் பாகங்களுக்கு சுத்த இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய்களில் இரத்தக்கட்டிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இந்த வகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியாவில் வாழும் 35 வயதான ஆசிய நாட்டவரான பெண் ஒருவர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டு ஆறு நாட்களில் வலது பக்கம் விட்டு விட்டு தலைவலியும், கண்களைச் சுற்றி வலியும் ஏற்பட்டு, இந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நபர் 37 வயதுடைய வெள்ளையரான ஒரு பெண், மூன்றாமவர் 43 வயதுடைய ஆசிய நாட்டவரான ஆண். இவர்களும் பக்கவாதத்தின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டாலும், சிகிச்சைக்குப் பின் அவர்களது நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் இந்த புதிய பிரச்சினை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு 4 முதல் 28 நாட்கள் வரை பக்கவாத அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்பதை கவனித்துக்கொள்ளுமாறு மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.