வானியல் அலகு, ஒளி ஆண்டு என்பதை எல்லாம் எதை வைத்து கணிக்கிறார்கள்? தெரிந்து கொள்வோம்
விண்வெளி என்பது மிக மிகப் பிரம்மாண்டமானது. பூமிக்கு அருகில் இருக்கும் கோள்களின் தூரத்தைக் கற்பனை செய்து பார்ப்பதுக்கூட கடினமானது. நாம் பயன்படுத்தும் கிலோ மீட்டர் அளவீட்டைப் பயன்படுத்தினால், அது மிகப் பெரிய எண்ணாக மாறிவிடும்.அவற்றைச் சொல்வதும் கடினம்.
வான் பொருட்களின் தூரங்களை எளிமையாகவும் சிறிய எண்களாகவும் சொல்வதற்குப் பல்வேறு அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் சுமார் 149.6 மில்லியன் கி.மீ. இதை எண்களால் எழுதுவது கடினம்.
அதற்காகத்தான் வானியலாளர்கள் இந்தத் தூரத்தை ஒரு வானியல் அலகாகப் (au - astronomical unit) பயன்படுத்துகிறார்கள். (ஒரு வானியல் அலகு என்பது 14957871 கி.மீ.) சூரியக் குடும்பத்தில் உள்ள வான் பொருட்களின் தூரத்தை அளக்க வானியல் அலகைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே இருக்கும் நட்சத்திரங்களின் தூரத்தைக் கணக்கிட வானியல் அலகால் கணித்தால் மிகப் பெரிய எண்ணாக மாறிவிடும். அதனால் அவற்றை ஒளி ஆண்டு தூரத்தை வைத்துக் கணக்கிடுகிறார்கள்.
ஒளிதான் மிக வேகமாகப் பயணிக்கும். விண்வெளியில் ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. ஓர் ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தூரம்.
சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் ஃப்ராக்ஸிமா செண்டாரி நட்சத்திரத்தின் தூரம் சுமார் 4.2 ஒளி ஆண்டுகள். ஒளி 4.2 ஆண்டுகள் பயணம் செய்யும் தூரம்.
ஒளி ஆண்டைப் பயன்படுத்துவதால் சிறிய எண்ணிலேயே தூரத்தைச் சொல்ல முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.