ஜேர்மன் ரயிலில் பயங்கரம்... ஐந்து பேரை கத்தியால் குத்திய புகலிடக்கோரிக்கையாளர்
ஈராக்கிலிருந்து ஜேர்மனிக்கு வந்த, இஸ்லாமிய தீவிரவாதி என கருதப்படும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், திடீரென ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஐந்து பேரை கத்தியால் குத்தினார்.
நேற்று காலை மேற்கு ஜேர்மனியிலுள்ள Herzogenrath என்ற புறநகர்ப்பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் தாக்கத் துவங்கினார்.
அதிர்ஷ்டவசமாக, அதே ரயிலில் சீருடையில் இல்லாத பொலிசார் ஒருவர் பயணித்துள்ளார்.
ஐந்து பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தக்க சமயம் பார்த்து அந்த பொலிசாரும் இரண்டு பொதுமக்களுமாக அந்த தாக்குதல்தாரி மீது பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
அதனால் மேலதிகச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
31 வயதான அந்த தாக்குதல்தாரி ஈராக்கில் பிறந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த தாக்குதல்தாரியைத் துணிச்சலாக பிடித்த 60 வயதுடையை பொலிசாரை மனதார பாராட்டியுள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான Herbert Reul, அவர் துணிச்சலாக செயல்பட்டதால், பயங்கர சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் அந்த பொலிசாரை ஹீரோ என புகழ, அவரோ, தான் பணிக்குச் சென்று கொண்டிருந்ததாகவும், தான் தன் கடமையை மட்டுமே செய்ததாகவும் பணிவுடன் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கத்தியால் தாக்கப்பட்டவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான Herbert Reul தெரிவித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அந்த தாக்குதல்தாரியை பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.