இன்று கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவேண்டிய புகலிடக்கோரிக்கையாளர்... கடைசி நேரத்தில் வந்த நல்ல செய்தி
இன்று (ஜனவரி 4, 2022) கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவேண்டிய புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு கடைசி நேரத்தில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது...
Samuel Ndesanjo Nyaga (74), 2000ஆம் ஆண்டு, அரசியல் புகலிடம் கோரி கனடாவுக்கு வந்தார். கிராமப்புற மக்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் கோரி பிரச்சாரம் செய்ததற்காக கென்யா அரசால் துன்புறுத்தப்பட்டதால் தான் புகலிடம் கோரி வந்ததாக தெரிவித்திருந்தார் Samuel.
ஆனால், அவரால் தான் சார்ந்த கட்சியின் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாததால் அவரது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படுவதற்கே மூன்று ஆண்டுகள் ஆனது. அதற்குப் பின்பும் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால், 10 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படார் Samuel.
பின்னர், Samuel கென்யாவுக்கே திரும்பலாம், இனி அவருக்கு அங்கு ஆபத்தில்லை என முடிவு செய்தார்கள் கனேடிய எல்லை ஏஜண்டுகள். அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எப்போது வேண்டுமானாலும் நாடுகடத்தப்படலாம் என்பதை எதிர்பார்த்தவராக, எல்லை ஏஜன்சி அலுவலகத்தில் வாரந்தோறும் கையெழுத்திட்டு வந்தார் Samuel.
கனடாவில் கால்வைத்து 21ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இன்று, அதாவது ஜனவரி 4ஆம் திகதி நாடுகடத்தப்படுவார் என அவருக்கு சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.
அப்போது, தனக்கு கென்யாவில் இப்போது எதுவுமே இல்லை என்று கூறியிருந்தார் Samuel.
இதற்கிடையில், ரொரன்றோவில் வாழும் கென்யா நாட்டவர்கள் Samuelக்காக ஒரு சட்டத்தரணியை நியமிப்பதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தார்கள். அவரை நாடுகடத்துவதை நிறுத்தக்கோரி ஒரு மனுவையும் ஒன்லைனில் உருவாக்கினார்கள். அந்த மனு 4,500க்கு அதிகமான கையெழுத்துக்களை பெற்றது.
கடந்த மாதம், Samuelஇன் சட்டத்தரணி, மனிதநேய அடிப்படையில் கனடாவில் வாழ அவரை அனுமதிக்குமாறு கோரி விண்ணப்பித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை, இறுதி நேர்காணலுக்காக எல்லை அதிகாரிகளை சந்திக்கவேண்டும் என கூறப்பட்டபோது, கனடாவிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை துவக்கியிருந்தார் Samuel. தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணம் வேறு தோன்ற, பதற்றத்துடன் இருந்தார் அவர்.
ஆனால், அவரது மனிதநேய அடிப்படையிலான நிரந்தர வாழிட விண்ணப்பம் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, Samuel இனி நாடுகடத்தப்படப்போவதில்லை!
தகவலறிந்ததும் மகிழ்ச்சியில் திளைக்கிறார் Samuel. ரொரன்றோ என் வீடு, கண்னை மூடிக்கொண்டே எங்குவேண்டுமானாலும் நான் போய்வருவேன் என்று கூறும் Samuel, இனி இங்கு குடியமர்ந்து ஒரு புதிய வாழ்வைத் துவக்கலாம் என என் மனது சொல்கிறது என்கிறார்.
தேவாலயம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றிய Samuel மீண்டும் அந்த பணியைத் தொடர இருக்கிறார்.
அத்துடன், இன்று கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுவோம் என்று அஞ்சியிருந்த அவர், இப்போது நிரந்தர வாழிட உரிமம் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.