பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்
Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்
விடயம் என்னவென்றால், அப்படி One in, one out ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவிலிருக்கும்போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆம், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் உடலில் காயங்கள் முதல் எலும்பு முறிவு வரை இருப்பது தெரியவந்துள்ளது.
சிலர், பயங்கர மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தான் தங்கியிருக்கும் இடத்தின் அறைக்கதவு எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்கக்கூட முடியாமல் திணறும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள்.
சிலர் வயிற்றில் பலமாக மிதிக்கப்பட்டதால் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விடயங்கள், சமீபத்தில், அதாவது, அவர்கள் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் இருக்கும்போது நடந்துள்ளது.
இதற்கிடையில், வழக்கம்போல உள்துறை அலுவலகம், அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.