அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள்
எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும், ஒரு புதிய வாழ்வைத் துவக்கவேண்டும் என்ற ஆசையில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயல்கிறார்கள் புலம்பெயர்வோர் பலர்.
ஆனால், அதற்காக தங்கள் உயிரையும், தங்கள் பிள்ளைகளின் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் கடலுக்குள் இறங்குவதைக் காட்டும் காட்சிகள், மனதைப் பதறவைக்கின்றன.
அபாயகரமான முறையில் குழந்தைகளுடன்...
குழந்தையை தோளில் சுமந்துகொண்டு, கடலில் ஆழத்தில் நிற்கும் ரப்பர் படகில் ஏறுவதற்காக கழுத்தளவு நீரில் நிற்கிறார் தந்தை ஒருவர். அவர் முகத்திலேயே அச்சம் அப்பட்டமாகத் தெரிகிறது.
கழுத்தில் மகள், முதுகைப் பிடித்துக்கொண்டு மனைவி என, முன் பின் தெரியாத ஊரில் கடலுக்குள் நிற்கிறார் மற்றொரு புலம்பெயர்வோர். அவரைச் சுற்றி எங்கும் தண்ணீர் மட்டுமே தெரிகிறது. அவர் மனைவியின் முகத்திலும் அப்படி ஒரு பயம்!
ஒரு பிள்ளை கழுத்தில், சுற்றி மற்ற பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் நிற்கிறார்கள் சிலர்.
படகில் இடம் இல்லையோ என்னவோ, கழுத்தளவு ஆழத்தில் பயமும் பதற்றமுமாக காணப்படும் இரண்டு பிள்ளைகளுடன் கடலுக்குள் அபாயகரமான முறையில் நிற்கிறார் ஒரு பெண்.
பிள்ளைகளை மட்டுமாவது எப்படியாவது படகில் ஏற்றிவிடவேண்டும் என துடித்தபடி கடலுக்குள் நிற்கிறார்கள் சிலர்.
இப்படி புதிய வாழ்க்கையைத் தேடிப் புறப்பட்டு, கடலிலேயே உயிரை விட்டவர்கள், இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 15 பேர். 2024இலோ, 78 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இப்படி அபாயகரமான முறையில் உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் புலம்பெயர்வோரைத் தடுக்க பிரித்தானியா எடுத்துவரும் முயற்சிகள் பெரிய அளவில் பலனளித்ததுபோல் தெரியவில்லை.
இந்நிலையில், இப்படி அநியாயமாக உயிர்கள் பலியாவதைத் தடுக்க, ஒரே வழிதான் உள்ளது என்கிறார் புலம்பெயர்தல் ஆதரவு தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த Steve Smith என்பவர்.
பிள்ளைகள் ஆங்கிலக்கால்வாய்க்குள் நிற்கும் காட்சிகள் பதறவைக்கின்றன. அவர்களுடைய உயிரைக் காப்பாற்றத் தவறும் ஒவ்வொரு அரசியல்வாதியும் வெட்கப்படவேண்டும் என்கிறார் அவர்.
முறைப்படி பிரித்தானியாவில் புகலிடம் கோர பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மக்கள் இப்படி அபாயகரமான முறையில் ஆங்கிலக்கால்வாய்க்குள் இறங்கமாட்டார்கள் என்கிறார் அவர்.
இந்த புகைப்படங்களைப் பார்த்தபிறகும் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மனிதாபிமானமே இல்லாத ஒரு அமைப்பால் நாம் ஆளப்படுகிறோம் என்பதையே அது உறுதி செய்கிறது என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |