உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்கள்: பிரித்தானியா அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளவர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துவருவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்கள்
சமீபத்தில், நிழல் உள்துறைச் செயலரான கிறிஸ் பிலிப், லண்டனில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, ஹொட்டல் முன், உணவு டெலிவரி செய்யும் பல்வேறு நிறுவனங்களின் பைகளுடன் சைக்கிள்கள் நிற்பதைக் கண்ட அவர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டிருந்த விடயம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆகவே, அரசின் உதவி பெறும் அல்லது அரசு ஏற்பாடு செய்துள்ள ஹொட்டல்களில் தங்கியிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள், உணவு டெலிவரி செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு துவக்கியுள்ளது.
அப்படி அரசு உதவி பெறும் புகலிடக்கோரிக்கையாளர்கள் வேலை செய்வது தெரியவந்தால், அவர்கள் அரசு ஹொட்டல்களில் தங்குவது மற்றும் அரசின் உதவி பெறுவதை இழக்க நேரிடும் என உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.
அத்துடன், உள்துறை அலுவலக அறிக்கை ஒன்றில், இத்தகைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு 60,000 பவுண்டுகள் அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு விநியோகம் செய்யும் ஊபெர் ஈட்ஸ் முதலான நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர்களை சந்திக்கும் அவசர கூட்டம் ஒன்றிற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இத்தகைய புகலிடக்கோரிக்கையாளர்கள் வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக அவர்கள் அரசுக்கு உறுதியளித்துள்ளார்கள்.
ஆக மொத்தத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களை எந்த வேலையும் செய்யவிடக்கூடாது என்பதில் பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |