கனடாவில் வாழிட உரிமம் பெற முயலும் புகலிடக்கோரிக்கையாளர்கள்: மோசடியில் சிக்கிக்கொள்வதை தடுக்க அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை
பெருந்தொகை செலுத்தியாவது எப்படியாவது கனடாவில் வாழிட உரிமம் பெற்றுவிடத் துடிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தடுக்கும் வகையில், புலம்பெயர்தல் ஆலோசகர்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய அமைப்பு ஒன்றை கனேடிய அரசு உருவாக்கியுள்ளது.
இலட்சக்கணக்கான புலம்பெயர்வோரும் அகதிகளும் கனடாவுக்கு குடிபெயர்வதற்காக புலம்பெயர்தல் ஆலோசகர்களைத்தான் (Immigration Consultants) நம்பியிருக்கிறார்கள். இந்த ஆலோசகர்களில் பெரும்பாலானோர் நேர்மையாக செயல்பட்டாலும், சில மோசடியாளர்களும் இருப்பதாகவும், அவர்கள் தங்கள் நிலையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதாகவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.
ஆகவே, கனடாவில் வாழிட உரிமம் பெற முயற்சிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தடுக்கும் வகையில், புலம்பெயர்தல் ஆலோசகர்களை ஒழுங்குபடுத்துவதற்காக கனேடிய அரசு College of Immigration and Citizenship Consultants என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
அந்த அமைப்பின் நோக்கம், மோசடியாளர்களை களையெடுப்பதாகும். அனைத்து புலம்பெயர்தல் ஆலோசகர்களும் இனி கட்டணம் வசூலிக்கவேண்டுமானால் முறைப்படி உரிமம் பெறவேண்டும்.
இந்த அமைப்பு குறித்து புதன்கிழமை பேசிய புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, நம் நாட்டுக்கு வர விரும்புவோரை பாதுகாக்கவேண்டிய கடமை நமக்குள்ளது, அதை நாம் நிறைவேற்றுகிறோம் என்றார்.
இந்த புதிய ஒழுங்குமுறை அமைப்பு, கனடா வர விரும்புவோருக்கு தொழில்முறையிலான மற்றும் நேர்மையான ஆலோசனை கிடைப்பதை உறுதி செய்து, அதன் மூலம் நமது புலம்பெயர்தல் அமைப்பை வலுப்படுத்தும் என்றார் அவர்.
College of Immigration and Citizenship Consultants என்ற அந்த ஒழுங்குமுறை அமைப்பு, இம்மாதம், அதாவது நவம்பர் 23 அன்று துவக்கப்பட்டுள்ளது. முந்தைய ஒழுங்குமுறை அமைப்பான புலம்பெயர்தல் ஆலோசகர்களுக்கான கனேடிய ஒழுங்குமுறை கவுன்சில் என்ற அமைப்புக்கு பதிலாக இந்த புதிய அமைப்பு இனி செயல்படும்.
இந்த அமைப்பு, ஏற்கனவே கனடாவுக்கு வந்து இங்கு வாழ்ந்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள், பெருந்தொகை செலுத்தியாவது வாழிட உரிமம் பெற்றுவிடத் துடிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை ஏமாற்ற முயல்வோரிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவும் என்கிறது கனடா அரசு.