பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிகையாளர்கள் உண்ணாவிரதம்...
பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சாப்பிட மறுத்து ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் Gatwick விமான நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் மையத்தில் இருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள், இந்த தகவலை பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
இம்மாதம் (ஜூன்) 1ஆம் திகதி, சுமார் 60 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு, அவர்கள் இம்மாதம் 14ஆம் திகதி ருவாண்டா நாட்டிற்கு நாடுகடத்தப்பட இருப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாங்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
உணவு உண்ண மறுத்து அவர்கள் சர்க்கரை கலந்த தண்ணீர் மட்டுமே அருந்தி வந்த நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு, அந்த சர்க்கரையையும் பாதுகாவலர்கள் நிறுத்திவிட்டார்களாம்.
ஆகவே, வேறு வழியில்லாமல் சுமார் 17 பேர் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். உண்ணாவிரதம் இருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை சந்தித்த புலம்பெயர்தல் அதிகாரிகள், நீங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் விமானத்தில் பயணிக்கலாம் என்று கூறினார்களாம்.
ஆக, ஒருபக்கம் எப்படியாவது இம்மாதம் 14ஆம் திகதி அவர்களை நாடுகடத்தியே தீருவது என உள்துறைச் செயலகம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்க, அது தொடர்பான சட்டமே 28ஆம் திகதிதான் அமுலுக்கு வருகிறது, ஆகவே, அதற்கு முன் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவது சாத்தியமில்லை என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவர்.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!