கனடாவில் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் புதிய புலம்பெயர்தல் திட்டம்
கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரும், பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்களும் கூடி புதிய அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
2022 ஜனவரி 1 முதல், Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் நிரந்தரமாக்கப்படுவதுடன், அது இனி அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என அழைக்கப்படும் என்றும் கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்கள் ஆகியோர் கூடி அறிவித்துள்ளார்கள்.
இத்திட்டம் ஆண்டொன்றிற்கு 6,000 பேரை அட்லாண்டிக் கனடாவுக்கு வரவேற்கும்.
தற்போதைய Atlantic Immigration Pilot திட்டம், டிசம்பர் 31உடன் அதிகாரப்பூரவமாக முடிவுக்கு வர உள்ளது. ஆனாலும், ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் செல்லத்தக்க provincial endorsement வைத்திருப்பவர்களிடமிருந்து, விண்ணப்பங்களை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு 2022 மார்ச் 5 வரை ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Atlantic Immigration Pilot (AIP) என்பது என்ன?
கனடாவின் அட்லாண்டிக் கனடா பகுதியில் ஏராளமான பணியாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள், ஆனால், புதிதாக சில பணியாளர்களே வருகிறார்கள்.
இந்த பிரச்சினை நாடு முழுவதுமே காணப்படுகிறது என்றாலும், Newfoundland and Labrador, Prince Edward Island, New Brunswick, மற்றும் Nova Scotia ஆகிய நான்கு கிழக்குக் கடற்கரை மாகாணங்களில் இந்த பிரச்சினை குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.
இதற்கு முன் இப்பகுதியில் புலம்பெயர்தல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், புலம்பெயர்வோரை தக்கவைக்க அட்லாண்டிக் கனடா தடுமாறியே வந்தது.
ஆனால், 2017ஆம் ஆண்டு Atlantic Immigration Pilot திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபின், அது வெற்றிபெற்றுள்ளதற்கான அறிகுறிகள் தெரிவதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது இந்த Atlantic Immigration Pilot திட்டம் நிரந்தரமாக்கப்பட இருப்பதுடன், அது இனி அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என அழைக்கப்படும் என்றும் கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார்.