இன்று முதல் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு!
இந்தியா முழுவதும் ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட்-1) முதல் அமுலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கார்டுகளை வேறு வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்தும்போது, பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 15-இலிருந்து ரூ. 17-ஆக உயருகிறது.
இதுவே பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 5-இலிருந்து ரூ. 6-ஆக உயருகிறது.
எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை மற்ற வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் மாதத்துக்கு 3 முதல் 5 முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளும் நடைமுறை தொடர்கிறது.
இதன்மூலம், மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் 3 முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மற்ற நகரங்களில் அதிகபட்சம் 5 முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
முன்னதாக, அதிக பரிமாற்றக் கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில், பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.