அதிகாலையில் தீப்பற்றி எரிந்த ATM இயந்திரம்: பல லட்ச ரூபாய் கருகிய சோகம்
சென்னையில் தனியார் ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கில் உள்ள ரூபாய் தீயில் எரிந்து நாசமானது.
ஏடிஎம் மையத்தில் பரவிய தீ
சென்னை புழல் கேம்ப் நெடுஞ்சாலையில் ஓட்டல் மற்றும் அதன் அருகே இந்தியா ஓன் என்ற தனியார் ஏடிஎம் மையமும் உள்ளது. இதில், ஓட்டலில் உள்ள ஊழியர்கள் வேலை முடித்து நேற்று இரவு சென்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏடிஎம் மையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியது. இதனால், ஏடிஎம் மையமும், ஓட்டலும் கொழுந்துவிட்டு எரிந்தன.
அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர், செங்குன்றம், மாதவரம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பல லட்ச ரூபாய் தீயில் கருகியது
இந்த தீ விபத்தில் ஏடிஎம் இயந்திரம், ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் எரிந்ததால் பல லட்ச ரூபாய் தீயில் கருகியது.
இது குறித்து ஆய்வு செய்த பின்னரே, எவ்வளவு பணம் தீயில் கருகியது என்பது தெரியவரும். இந்த சம்பவம் குறித்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஏடிஎம் மையத்தில் தீ பிடித்து, பக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |