பாரிசில் கத்திக்குத்து தாக்குதல்: கடும் கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி
பிரான்சின் தலைநகர் பாரிசில் பொதுமக்களை குறிவைத்து இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலாபயணி ஒருவர் உயிரிழந்தார்.
உள்ளூர்நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் ஈபிள் கோபுரம் அருகே 26 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர், அதில் பிரித்தானியாவை சேர்ந்த நபரும் ஒருவர்.
இதனை தொடர்ந்து அந்தநபரை கைது செய்த பொலிசார் விசாரணையை தொடங்கினர். அதில், ஏற்கனவே அந்நபர் மீது ISIS இயக்கத்துடன் தொடர்பு கொண்டதாக குற்றம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
ஈரானை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த இவர், தன்னுடைய 18வது வயதில் இஸ்லாம் மதத்துக்கு மாறியதும், ISIS இயக்கத்தில் சேர்வதற்காக சிரியா சென்ற போது கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்ததும் தெரியவந்தது.
மேலும் குறித்த நபருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பலஸ்தீனத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் இறப்பதால் மனமுடைந்த இளைஞர், ”அல்லாஹீ அக்பர், அல்லாஹ் மிகப்பெரியவன்” என கூறிக்கொண்டே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம்
இச்சம்பவத்தை ”தீவிரவாத தாக்குதல்” என குறிப்பிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- காசா இடையேயான போர் நீடித்து வரும் சூழலில், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஏற்கனவே ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 26 வயது இளைஞர், பொலிசாரின் கண்காணிப்பு பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேக்ரோன் X தளத்தில், ஜேர்மன் நபரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.