பெண் பொலிசாரை கத்தியால் குத்திவிட்டு ஓடிய நபர்... மீண்டும் பொலிசார் மீது தாக்குதல்: பிரான்சில் தொடரும் பரபரப்பு
பிரான்சிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பெண் பொலிசார் ஒருவரைக் கத்தியால் குத்தி விட்டு அவரது துப்பாக்கியுடன் தப்பினார்.
நேற்று காலை Nantes நகருக்கு வடக்கே அமைந்துள்ள La-Chapelle-sur-Erdre என்ற கிராமத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் கத்தியுடன் நுழைந்துள்ளார் ஒருவர். அங்கிருந்த பெண் பொலிசார் ஒருவரை அவர் கத்தியால் குத்தியதில், அந்த பெண் பொலிசார் படுகாயமடைந்தார்.
அந்த பெண் பொலிசாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் அந்த நபர். இரண்டு ஹெலிகொப்டர்கள், பல மோப்ப நாய்களுடன், 250 பொலிசார் அந்த நபரை வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில், ஒரு இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், அந்த பெண்ணை பிடித்துவைத்துக்கொண்டுள்ளார். பொலிசார் அங்கு வரவே, பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார் அவர்.
அதில், இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். பொலிசார் திருப்பிச் சுட்டதில் அவர் படுகாயமடைந்து, சிறிது நேரத்திற்குப் பின் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், அந்த 40 வயது நபர் பிரான்சில் பிறந்த பிரான்ஸ் குடிமகன் என்றும், தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்தவர் என்றும் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொலிசார் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பேரணிகள் நடத்தியுள்ள
நிலையில், தொடர்ச்சியாக பொலிசார் மீது ஒரே நாளில் இரு முறை தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.