பயணிகள் கவனத்திற்கு... அபராதம் முதல் கைது வரை: பிரித்தானியாவில் திங்கட்கிழமை முதல் அறிமுகமாகும் புதிய விதி
பிரித்தானியாவில், திங்கட்கிழமை முதல் (8.3.2021), விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பூர்த்தி செய்யப்பட்ட புதிய சுய விளக்க படிவம் ஒன்றை கொண்டுவராவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு மே மாதம் 17ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்வோருக்கு இந்த தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் பணி, திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு தொடர்பான பயணங்கள் இந்த விதிவிலக்கில் அடக்கம்.
போக்குவரத்துத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், திங்கட்கிழமை முதல் இங்கிலாந்திலிருந்து சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுய விளக்க படிவம் ஒன்றை பூர்த்தி செய்து தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பக்கங்கள் அடங்கிய அந்த படிவத்தில், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர்கள் பயணம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்திருக்கவேண்டும்.
இந்த படிவத்தைக் கொண்டு வராதவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என போக்குவரத்துத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், யணிகளை இடைநிறுத்தி அவர்களிடம் இந்த ஆவணம் உள்ளதா என சோதிக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்படி பூர்த்தி செய்யப்பட்ட அந்த சுய விளக்க படிவத்தை கொண்டுவராதவர்களுக்கு 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், அனுமதிக்கப்படாத காரணங்களை படிவத்தில் கொடுத்துள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்,
எல்லாவற்றிற்கும் மேல், அந்த ஆவணத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள விடயம் பொய் என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம், மேலும் அவர்களுக்கு 200 முதல் 6,400 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

