ஜேர்மனியில் விமான நிலையத்தின் வேலியில் மோதிய கார்: விசாரணையில் தெரியவந்த உண்மை
Audi Car breach at Leipzig/Halle airport fence: விமான நிலையத்தின் வேலியை உடைத்துக் கொண்டு கார் ஒன்று நுழைந்த சம்பவம் ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய வேலியில் மோதிய கார்
ஜேர்மனியின் லைப்சிக்/ஹாலே(Leipzig/Halle) விமான நிலையத்தின் வெளிப்பக்க பாதுகாப்பு வேலியின் மீது மோதி கார் ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தின் வேலி சேதமடைந்து இருப்பதை சனிக்கிழமை இரவு விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக 20 வயது மற்றும் 32 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறையினரிடம் நேரில் சரணடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த உண்மை
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 20 வயது இளைஞர் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டி பழகிய போது விமான நிலையத்தின் வேலியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காரை ஓட்டிய 20 வயது இளைஞரும், அவருடன் இருந்த மற்றொரு 32 வயது இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் இருவர் மீதும் தற்போது விபத்து ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற குற்றத்திற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படுத்திய கார் தொடர்பான விவரங்களை பொலிஸார் வெளியிடாத போதிலும், விபத்து நடந்த இடத்தில் கிடந்த வாகன பாகங்களை வைத்து அது “ஆடி”(Audi) கார் என்று பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.