6 ஓவரில் ஆட்டத்தை முடித்த ஆஸ்திரேலியா! நீடிக்கும் அரையிறுதி வாய்ப்பு : வங்கதேசம் மோசமான தோல்வி
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சூப்பர் 12 ஆட்டத்தின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அதன் படி வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களான லிட்டன் தாஸ் முதல் பந்திலே மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் டக் அவுட் ஆக, அதன் பின் வந்த சவுமியா சர்கார் 8 பந்தில் 5 ஓட்டம், மற்றொரு துவக்க வீரர் மொமது நயீம் 16 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் என வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் அவுட் ஆக இறுதியாக வங்கதேச அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 73 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா 4 ஓவரில் 19 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின் 74 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு பின்ச் மற்றும் வார்னர் அதிரடி ஆட்டத்தை கொடுக்க, இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 58 ஓட்டங்கள் எடுத்தது.
டேவிட் வார்னர் 18 ஓட்டங்களிலும், பின்ச் 40 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க இறுதியாக ஆஸ்திரேலியா அணி 6.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 78 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் மூன்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அடுத்து வரும் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.
ஏனெனில் ஆஸ்திரேலியா அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளது.
அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணியும் 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் உள்ளது. அந்தணிக்கு அடுத்த போட்டி இங்கிலாந்துடன் வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.