பிரித்தானியாவை தாக்குதல் ஆஸ்டென் புயல்: பல இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை
Austen Strom Alart: UK Will Face Snow, Heavy Rain: பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் வானிலை எச்சரிக்கை
ஆஸ்டென்(Storm Austen) என்று பெயரிடப்பட்ட புயலானது வெள்ளிக்கிழமை பிரித்தானியாவை நோக்கி வேகமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் திடீர் பனிப்பொழிவுகள் போன்ற கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலோர பகுதிகளில் 70 மைல் வேகத்தில் இந்த காற்றானது வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் அதே நேரத்தில், ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் காலை 10 மணியளவில் பனிப்பொழிவானது உருவாக தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த பனிப்பொழிவானது மதியத்திற்குள் தீவிரமடைந்து மாலை அபெர்டீன்ஷைர் பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, ராஸ் ஷைர் மற்றும் குரோமார்ட்ஷைர், இன்வெர்னஸ்-ஷைர், பான்ஃப்ஷைர், அபெர்டீன்ஷைர் மற்றும் பெர்த்ஷைர் மற்றும் அர்கில்ஷைர் ஆகிய 6 மாகாணங்களில் பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்டென் புயலை தொடர்ந்து சனிக்கிழமை மற்றொரு புயல் பிரித்தானியாவை தாக்கக்கூடும் என்று பிபிசி வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.