டவுண் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனால் இந்தியக் குடும்பத்தையே நாடு கடத்தும் அவலம்!
அவுஸ்திரேலியாவில் டவுண் சிண்ட்ரோம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட இந்தியச் சிறுவனுக்காக அவர்களது குடும்பத்தின் நிரந்தரமாகத் தங்குவதற்கான விசாவை அரசாங்கம் ரத்து செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிக மருத்துவச் செலவு
அவுஸ்திரேலியா நாட்டின் பெர்த் மாகாணத்தில் வாழ்ந்து வரும், இந்தியத் தம்பதிகளான கிருஷ்ணா மற்றும் அனீஷ்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த மகனான பத்து வயது ஆரியனுக்கு டவுன் சிண்ட்ரோம் என்ற நோய் குறைபாடு இருப்பதால், அரசாங்கத்திற்கு நிதிச் சுமை அதிகரிப்பதாகக் கூறியுள்ளது. இதனால் அக்குடும்பத்தை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
@7news
பெடரல் அரசாங்கம் டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைக்கு நீண்ட மருத்துவ பராமரிப்பு தேவைப்படும். பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே கிட்டத்தட்ட $664,000 செலவாகும்.
அந்தத் தொகையில் பெரும் பகுதி குழந்தையைக் கவனித்துக் கொள்வோர்க்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சிறப்புக் கல்விச் சேவைகளுக்கே செலவாகிவிடும். இதனால் மார்ச் 15 வரை பிரிட்ஜிங் விசாவில் இருந்த அந்த குடும்பத்தினரது நிரந்தரமாகத் தங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
மனமுடைந்த பெற்றோர்
கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொலைத் தொடர்பு மற்றும் சைபர் பாதுகாப்புத் துறையில் அனீஷ் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விண்ணப்பம் நிராகரிப்பட்டதால் மனமுடைந்து போன அனுஷ் “நான் அவுஸ்திரேலியாவை மனிதாபிமானமுள்ள நாடென நினைத்தேன். ஆனால் இது வலிக்கிறது, உங்கள் குழந்தையைக் குறிப்பிடத்தக்கச் செலவாக வகைப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, அது வலிக்கிறது. இது மிகவும் வேதனையளிக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் அவர்களது குழந்தைகள் தனிப்பட்ட முறையில் கல்வி கற்கிறார்கள், மற்றும் நல்ல உடல்நலம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களுக்குப் பராமரிப்பாளர் அல்லது சிறப்புச் சேவைகள் தேவையில்லை என்று அனீஷின் மனைவி கிருஷ்ணா கூறியுள்ளார்.
கடவுளின் குழந்தைகள்
"உன் தம்பியின் உடல்நிலை காரணமாக நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று என் மகளிடம் சொன்னால், அவள் என்ன நினைப்பாள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை." எனத் கிருஷ்ணா உருக்கமாகக் கூறியுள்ளார்.
@7news
இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அத்தம்பதியினர் மனு அனுப்பியுள்ளனர். “எங்கள் வழக்கில் தலையிட்டு எங்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குமாறு நான் அரசிடம் கெஞ்சுகிறேன்," என கிருஷ்ணா அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
டவுண் சிண்ட்ரோம், குழந்தைக்குத் தாயின் கருவிலேயே ஏற்படும் குறைபாடு. உடல் பாகங்களில் மாற்றம், குடல் பிரச்சனை, வலிப்பு நோய் போன்றவை இந்நோயாளிகளுக்கு இருக்கும். பொதுவாக டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளைக் கடவுளின் குழந்தைகள் என மனித நேய அமைப்புகள் அழைக்கின்றன.