அங்கே செல்ல அனுமதி இல்லை: சொந்த நாட்டு மக்களுக்கு தடை விதித்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி போடாதவர்கள் வடக்குப் பிரதேசத்தில் நுழைவதைத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு குறைவான சிறார்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான ஊழியர்கள், கருணை அடிப்படையில் அனுமதி பெற்றவர்கள் என குறிப்பிட்ட விதிவிலக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறு எண்ணிக்கையிலான பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார் என்பதுடன் கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் மைக்கேல் கன்னர் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பிரதேசத்தில் ஒரே ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே, பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Robinson River சமூகத்தை சேர்ந்த பூர்வக்குடி பெண் ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டும், கண்காணிப்பில் இருந்த நாட்களில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், வடக்குப் பிரதேசத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 என அதிகரித்துள்ளது. குயின்ஸ்லாந்தில் அதிகரித்துள்ள தொற்று காரணமாகவே வடக்குப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கன்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ள நீங்கள் தகுதியுடையவராக இருந்தும், முழுமையாக நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும், வடக்கில் அனுமதியில்லை என தெரிவித்துள்ளார் கன்னர்.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றில்லை என்றால் விமான நிலையத்தில் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.