உயர்மட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே கதி தான்! இந்திய விமானங்களுக்கு தடை விதித்த பிரபல நாடு
பிரபல நாட்டில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடிமக்கள் நாடு திரும்ப முடியாமல் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரித்துவருவதால், சமீபத்தில் பிரித்தானியா, கனடா, ஹொங்ஹொங், இந்தோனேசியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்தன.
மேலும், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளன.
இதற்கிடையில், இந்திய விமானங்கள் வரத்தை 30 சதவீதமாக குறைத்து, தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை விதித்திருந்த அவுஸ்திரேலியா, தற்போது இந்தியாவிலிருந்து மற்றும் இந்தியா வழியாக வரும் அனைத்து விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த தற்காலிக தடை மே 15-ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் நாட்களில் நிலைமையைப் பொறுத்து, பயணத் தடை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த திடீர் விமானத் தடையால், இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், நாட்டின் உயர்மட்ட கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.
பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோர் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஆக்ஸிஜன் டாங்கிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை அவுஸ்திரேலிய அரசு இந்தியாவுக்கு அனுப்பும் என்றும் அந்நாட்டு பிரதமர் மோரிசன் கூறியுள்ளார்.