8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் அவுஸ்திரேலியா... வழக்கம் போல் சொதப்பிய தென்னாப்பிரிக்கா
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த அறியிறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா.
24 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகள்
நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் துடுப்பாட்டம் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் ஏமாற்றமளிக்க, தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
24 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறியது. 14 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 44 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த நிலையில் மழை குறுக்கிட, ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி சதமடித்து 101 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
டிராவிஸ் ஹெட் அதிரடி
இறுதியில் 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென் ஆப்பிரிக்கா 212 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 62 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 29 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் டக்அவுட்டானார். தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித்(30), மார்னஸ் லபுசேன்(18), கிளென் மேக்ஸ்வெல்(1) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 47.2 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |