வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபார வெற்றி... அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிய ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் அபார வெற்றிப்பெற்று ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
இன்று அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் குரூப் 1ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் அதன் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் மோதின.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
தென் ஆப்பிரிக்காவுடன் போட்டி நிலவி வரும் நிலையில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்க ஆஸ்திரேலிய அணி கட்டாய வெற்றிப்பெற வேண்டிய சூழலில் களமிறங்கியது.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 157 ரன்கள் எடுத்தது.
கிறிஸ் கெய்ல் (15), எவின் லூயிஸ் (29), நிக்கோலஸ் பூரன் (4), ரோஸ்டன் சேஸ் (0), ஷிம்ரோன் ஹெட்மியர் (27), கீரன் பொல்லார்ட் (44), டுவைன் பிராவோ (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கெய்ல் மற்றும் பிராவோவுக்கு இது கடைசி சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆண்ட்ரே ரஸ்ஸல் (18), ஜேசன் ஹோல்டர் (1) ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஜாம்பா தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
ஆரோன் பிஞ்ச் (9), மிட்செல் மார்ஷ் (53) ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் மற்றும் +1.216 நெட் ரன் ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது.
இதனால், +0.742 நெட் ரன் ரேட் மற்றும் 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்குள் தகுதி பெற, இங்கிலாந்துக்கு எதிராக பெரிய அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.