ஊடக விதிகளை திருத்திக்கொள்ள அவுஸ்திரேலியா முடிவு; டீலுக்கு சம்மதம் தெரிவித்தது பேஸ்புக்!
புதிய ஊடக விதிகளை திருத்தி அமைத்துக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய செய்திகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவும் பேஸ்புக் சம்மதம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா அரசு சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என்ற புதிய விதியை அமுல்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகளை அவுஸ்திரேலியர்கள் படிக்கவும் பகிரவும் முடியாதபடி தடை செய்தது. மேலும், அவுஸ்திரேலிய ஊடகங்கள் பகிரும் செய்திகளும் மற்ற நாடுகளில் படிக்கமுடியாதபடி தடை விதித்தது.
இதனால், அவுஸ்திரேலிய அரசுக்கும் பேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் இருந்தது.
இந்நிலையில், இரு தரப்பினரும் பேசி ஒரு சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனி பேஸ்புக்கில் வெளியாகும் என அந்நிறுவனத்தின் அவுஸ்திரேலிய பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கு உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.