இந்தியாவில் இருந்து திரும்பினால் சிறை... எழுந்த கடும் விமர்சனம்: விளக்கமளித்த அவுஸ்திரேலிய பிரதமர்
அவுஸ்திரேலிய குடிமக்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முயற்சித்தால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற உத்தரவுக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, இங்கு 14 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள அவுஸ்திரேலிய குடிமக்கள் சொந்த நாடு திரும்ப அவுஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.
குறித்த உத்தரவை மீறி நாடு திரும்ப முயற்சிக்கும் குடிமக்களுக்கு ஐந்தாண்டு வரை சிறை தண்டனையும் 37 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.
இதற்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது இன ரீதியான நடவடிக்கை எனவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மட்டுமின்றி, சொந்த நாட்டு மக்களை பாதுகாப்பதை விடுத்து, அவர்களை சிறையில் அடைக்கும் உத்தரவு மிக கடுமையானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் இருந்து நாடு திரும்புபவர்களால், தொற்று எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த கடுமையான முடிவு தற்காலிகமானது தான். நாட்டில் உள்ள கொரோனா முகாம்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில், மூன்றாவது அலை உருவாவதை தடுக்கும் நல்ல எண்ணத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அவுஸ்திரேலிய குடிமக்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசின் இந்த கடும்போக்கு நடவடிக்கையால் பிரபல கிரிக்கெட் வீரர்கள் உட்பட இந்தியாவில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும் ஸ்காட் மோரிசனின் இந்த நடவடிக்கையை அவரது கூட்டணி கட்சியினரே விமர்சிக்கும் நிலையும் ஏற்பட்டது.