அவுஸ்திரேலியாவில் 4 வயது சிறுமியை கடத்தி 18 நாட்கள் அடைத்துவைத்த நபருக்கு சிறை
மேற்கு அவுஸ்திரேலியாவில் பெற்றோருடன் சுற்றுலா வந்த நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 வயது சிறுமியை கடத்திய நபர்
இந்த கடத்தல் சம்பவம் அக்டோபர் 16, 2021-ல் நடந்தது. சுற்றுலாவுக்கு வந்த 4 வயது சிறுமி கிளியோ ஸ்மித் (Cleo Smith) தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து 37 வயதான டெரன்ஸ் கெல்லி (Terence Kelly) என்பவரால் கடத்தி செல்லப்பட்டார்.
18 நாட்களுக்குப் பிறகு சிறுமி கிளியோ ஸ்மித் காணாமல் போன இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள கார்னவோனில் தனியாக ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டாள்.
Getty Images
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து, பூட்டியிருந்த வீட்டிற்குள் பொலிஸார் புகுந்து சிறுமியை மீட்டனர். பின்னர் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அதையடுத்து, டெரன்ஸ் கெல்லியை பொலிஸார் வலைவீசி தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
13 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கெல்லி கடந்த ஆண்டு கார்னார்வோனில் நீதிமன்றத்தில் ஆஜரானபோது கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வாரம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, சம்பவத்தன்று அதிகாலை 2.40 மணி முதல் 4.40 மணி வரை கிளியோவை அவரது குடும்பத்தினரின் கூடாரத்தில் இருந்து அவர் எப்படி அழைத்துச் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது வீட்டில் சிறுமியை வெளியிலிருந்து பூட்டப்பட்ட ஒரு அறையில் எவ்வாறு தங்க வைத்தார் என்பது உட்பட அனைத்தையும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Getty Images
கெல்லிக்கு சிறு வயதிலேற்பட்ட பாதிப்பு
கிளியோவை அழைத்துச் சென்றதற்தை ஒப்புக்கொண்டாலும், சிறுமியை அங்கேயே வைத்துக் கொள்ளத் திட்டமிடவில்லை விசாரணையில் கூறியுள்ளார்.
கெல்லி நரம்பியல் குறைபாட்டால் அவதிப்படுவதாகவும், அவர் தனது குழந்தை பருவத்தில் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானவர் என்றும் கூறப்படுகிறது.
கெல்லியின் தந்தை 'வன்முறை மற்றும் துஷ்பிரயோகம்' செய்தவர், அவரது தாயார் 'அதிகமாக குடித்துவிட்டு கஞ்சா பயன்படுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர் யதார்த்தத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு 'கற்பனை உலகத்தை' உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
கெல்லி தனக்கு பல குழந்தைகள் இருப்பதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவை அனைத்தும் கற்பனையானவை என்று கூறப்படுகிறது.