கடுமையான நடவடிக்கை எடுப்போம்! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய பிரதமர்
ரஷ்யாவிடம் கைதியாக பிடிபட்ட தங்கள் நாட்டவரை துன்புறுத்தியிருந்தால், அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சமூக ஊடகங்களில் வெளியான காணொளில், ஆஸ்கார் ஜென்கின்ஸ் (32) என்ற அவுஸ்திரேலிய நாட்டவர் ராணுவ சீருடையில் கைகள் கட்டப்பட்ட நிலையில், ரஷ்ய விசாரணை அதிகாரியால் விசாரிக்கப்பட்டு தாக்கப்படுவது இருந்தது.
கடந்த ஆண்டு உக்ரைன் பாதுகாப்புப் படையில் ஜென்கின்ஸ் சேர்ந்திருந்தார். ஆனால் அவருக்கு முந்தைய ராணுவ அனுபவம் இல்லை.
இந்த நிலையில் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட ஜென்கின்ஸின் நிலையை விளக்க வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) கோரியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஆஸ்கார் ஜென்கின்ஸின் நிலையை உடனடியாக உறுதிப்படுத்த ரஷ்யாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். உண்மைகள் வெளிவரும் வரை நாங்கள் காத்திருப்போம். ஆனால், ஆஸ்கார் ஜென்கின்ஸுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருந்தால், அது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் முடிந்தவரை வலுவான நடவடிக்கை எடுக்கும்" என எச்சரித்துள்ளார்.
ஒருவேளை ஜென்கின்ஸ் இறந்துவிட்டால் அவுஸ்திரேலியா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை அவர் விரிவாக கூறவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |