இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா எடுத்துள்ள முக்கிய முடிவு... இவர்களுக்கு அனுமதி
உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குடியேறியவர்களுக்கு பயணத்தடை விதித்திருந்த அவுஸ்திரேலிய நிர்வாகம் தற்போது முக்கிய முடிவை முன்னெடுத்துள்ளது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குடியேறிய மக்களுக்கு விதித்திருந்த பயணத்தடையை அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த முடிவு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய ஓமிக்ரான் மாறுபாடு பரவல் காரணமாக இறுதி முடிவை எடுக்க இன்னும் இரண்டு வார காலம் தாமதமாகலாம் என்றே தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுடன் வாழப்பழக வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம், ஆனால் நம்மை அது பின்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ஸ்காட் மோரிசன்.
தற்போதைய தரவுகளை ஒப்பிடுகையில், நாம் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அதானல் கொரோனா தொற்றுடன் போராட தயாராகிவிட்டோம் என ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 90% பேர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அளவையும் குறைத்துள்ளது அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை.
கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச எல்லைகளை மூடிவைத்தது அவுஸ்திரேலியா. தற்போது சுமார் 2 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
இதனால் அவுஸ்திரேலிய பொருளாதாரத்தில் 25 பில்லியன் டொலர் அளவுக்கு ஏற்றம் இருக்கும் எனவும், அது வேலை வாய்ப்பை உருவாக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நிர்வாகம் பயணத்தடையை நீக்குவதனால் 160,000 மாணவர்கள் உட்பட 235,000 வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியவுக்கு திரும்புவார்கள் என்றே தெரியவந்துள்ளது.
டிசம்பர் 1ம் திகதி முதல் பயணத்தடை நீக்கப்படுவதாக இருந்த நிலையில், ஓமிக்ரான் பரவல் காரணமாக இரண்டு வார காலம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.