$5000 மதிப்புள்ள Labubu பொம்மைகள் திருட்டு: பொலிஸார் பிடியில் சிக்கிய அவுஸ்திரேலியர்
பிரபலமான Labubu பொம்மைகளை திருடியதாக அவுஸ்திரேலியர் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Labubu பொம்மைகள் திருட்டு
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா காவல்துறையினர் A$9000 (அமெரிக்க டொலர் $5000) மதிப்புள்ள Labubu பொம்மைகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலியர் ஒருவரை கைது செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மெல்போர்னில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பொலிஸார் நடத்திய தீவிர சோதனையில் பிரபலமான 43 Labubu பொம்மைகள் கைப்பற்றப்பட்டதுடன் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 43 Labubu பொம்மைகளும் கடந்த ஜூலை மாதம் ஒரே ஷாப்பிங் சென்டரில் 4 தனித்தனி கொள்ளை சம்பவங்களில் திருடப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 43 Labubu பொம்மைகளில் சில பொம்மைகள் விலை உயர்ந்த மற்றும் Limited edition பொம்மைகள் ஆகும், இவை ஒன்றின் மறுவிற்பனை விலை சுமார் A$500 வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது தற்போது, நான்கு திருட்டு வழக்குகள் மற்றும் இரண்டு கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Labubu பொம்மைகள் என்பது என்ன?
Labubu பொம்மைகள் என்பது சீன உற்பத்தியாளரான Pop Mart உருவாக்கிய தேவதை போன்ற அழகிய பொம்மைகள் ஆகும்.
இவை மென்மையான துணியால் செய்யப்பட்ட உடல்கள் மற்றும் 9 பற்களுடன் புன்னகை கொண்ட மற்றும் கூர்மையான காதுகள் கொண்ட பொம்மைகள் ஆகும்.
இவை 2019 ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு Pop Mart நிறுவனத்துக்கு அதிக லாபத்தை ஏற்படுத்தி தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |