91 வயது தாயை பராமரித்து வந்த 70 வயது முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
70 year old Australian man wins 650000 dollars Lottery: 91 வயது தாயை பராமரித்து வந்த 70 வயது முதியவருக்கு லொட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
தாயை பராமரித்து வந்த 70 வயது முதியவருக்கு அதிர்ஷ்டம்
அவுஸ்திரேலியாவின் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதியவர், தனது 91 வயது தாயாரை முழுநேரமாக பராமரித்து வந்த நிலையில், 6.5 லட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான (சுமார் ரூ.5.5 கோடி) லொட்டரி பரிசு வென்றது பல வாரங்களுக்குப் பிறகுதான் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெரியாத எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்புகள்
பஸ்ஸெல்டன் (Busselton) பகுதியைச் சேர்ந்த அந்த முதியவர், தனது வயோதிக தாயாரின் உடல்நலத்தை கவனிப்பதில் அதிக நேரத்தை செலவழித்து வந்தார்.
இதனால் லொட்டரி நிறுவனமான Lotterywest பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், அந்த அழைப்புகளை அவர் எடுத்துக்கொள்ளவில்லை. தெரியாத எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் அவற்றை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தாயாரை கவனிக்கும் பணியிலேயே முழு கவனம்
சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த அழைப்புகளை புறக்கணித்த பிறகு, ஒருநாள் Lotterywest அதிகாரிகளுடன் அவர் பேசியபோதும், அவர்கள் கூறிய தகவலின் முக்கியத்துவத்தை ஆரம்பத்தில் புரிந்துகொள்ளவில்லை. தனது தாயாரை கவனிக்கும் பணியிலேயே முழு கவனமும் இருந்ததால், மீண்டும் அழைக்குமாறு கூறியதையும் மறந்துவிட்டதாக அவர் பின்னர் தெரிவித்தார்.
இறுதியில் Lotterywest மீண்டும் தொடர்புகொண்டபோதுதான், அவர் மிகப்பெரிய லொட்டரி பரிசை வென்றிருப்பது தெரியவந்தது. அவர் இணையத்தில் வாங்கிய 6.60 டொலர் மதிப்புள்ள System 7 டிக்கெட்டின் மூலம் இந்த வெற்றி கிடைத்தது. குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள் எண்களை பயன்படுத்தியே அவர் இந்த டிக்கெட்டை தேர்ந்தெடுத்திருந்தார்.
652,714 அவுஸ்திரேலிய டொலர் பரிசு
2026 ஆகஸ்ட் 22-ஆம் திகதி நடைபெற்ற Saturday Lotto குலுக்கலில், அவுஸ்திரேலியா முழுவதும் முதல் பரிசை வென்ற 10 பேரில் இவரும் ஒருவராக இருந்தார். பல்வேறு பிரிவுகளில் கிடைத்த பரிசுகளை சேர்த்து, மொத்தமாக 652,714 அவுஸ்திரேலிய டொலர் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி குறித்து அவருடைய 91 வயது தாயாருக்கு மட்டுமே இதுவரை தெரியும். முதற்கட்ட கொண்டாட்டமாக இருவரும் சேர்ந்து சீன உணவை ஆர்டர் செய்து மகிழ்ந்துள்ளனர். மேலும், தனது குடும்பத்தில் 5 தலைமுறையினர் ஒன்றுகூடும் அடுத்த குடும்ப சந்திப்பில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் ஆச்சரியமாக அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
Lotterywest அதிகாரிகள் கூறுகையில், பிறந்தநாள் மற்றும் குடும்ப நினைவு திகதிகளை அடிப்படையாகக் கொண்டு எண்களை தேர்வு செய்வது பல லொட்டரி விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமான முறையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |