டென்னிஸ் வரலாற்றில் 21 கிராண்ட் ஸ்லாம் வென்று ரஃபேல் நடால் உலக சாதனை!
ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
மெல்பர்னில் 5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்த இறுதிப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நடால் வென்றார்.
இதன்மூலம் 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால்.
அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றதுதான், 'ஓபன் எரா' டென்னிசில் இதுவரை ஒரு தனிநபர் பெற்ற அதிகபட்ச வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் நடாலுக்கு இது இரண்டாவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். 13 ஆண்டுகளுக்கு முன் 2009-ல் அவர் இப்படத்தை வென்றிருந்தார்.
இதுவரை ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடெரர், நோவாக் ஜோகோவிச் ஆகியோர் தலா 20 ஆண்கள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருந்தனர்.
இன்றைய வெற்றியின் மூலம் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடால்.
அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை இரண்டாம் முறை வென்றதன் மூலம் அவுஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், பிரென்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது இரண்டு முறை வென்றவர்களில் ஒருவர் ஆகியுள்ளார் நடால்.
நடால் 13 முறை பிரென்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றதுதான் ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஒருவரே அதிகபட்ச எண்ணிக்கையில் வென்றதாகும்.
35 வயதாகும் நடால் இப்போது உலக ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ளார்.
2005-ல் பிரென்ச் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதே, இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அப்போது நடாலுக்கு வயது வெறும் 19 மட்டுமே.